மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல்; மேஜிக் நிபுணர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்த பா.ஜ.க. முடிவு

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் மேஜிக் நிபுணர்களை ஈடுபடுத்த பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.
மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல்; மேஜிக் நிபுணர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்த பா.ஜ.க. முடிவு
Published on

போபால்,

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் வருகிற நவம்பர் 28ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ந்தேதி நடைபெறும்.

இந்த நிலையில், தேர்தலுக்கான பிரசார பணிகளில் ஈடுபட ஆளும் பாரதீய ஜனதா கட்சி தீவிர ஆலோசனை மேற்கொண்டது. கடந்த 15 வருடங்களாக 3 முறை ஆட்சி செய்து வந்துள்ள அக்கட்சி தொடர்ந்து 4வது முறையாகவும் ஆட்சியை பிடிக்க புதிய முயற்சியை மேற்கொள்ள உள்ளது.

அதன்படி, தேர்தல் பிரசாரம் மற்றும் கட்சி விளம்பரத்திற்காக மேஜிக் நிபுணர்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதுபற்றி அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பு நிர்வாகி ரஜ்னீஷ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, பிரசாரம் மற்றும் பொது மக்களை கவர மேஜிக் நிபுணர்களை வாடகைக்கு அமர்த்த திட்டமிட்டு உள்ளோம்.

அவர்கள் கிராம மற்றும் வளர்ந்து வரும் நகர பகுதிகளில் சந்தை பகுதிகளில் வாக்காளர்களை கவரும் வகையில் மேஜிக் ஷோக்கள் நடத்துவார்கள் என கூறியுள்ளார்.

கடந்த 1993 மற்றும் 2003க்கு இடைப்பட்ட 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசின் ஆட்சியில் இருந்த மோசம் நிறைந்த நிலையிலான சாலைகள், மின் விநியோகம் மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவற்றை எடுத்து சொல்லும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com