கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் செய்த மொத்த செலவு எவ்வளவு..? வெளியான தகவல்

பா.ஜனதா கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு ரூ.1,494 கோடி செலவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் செய்த மொத்த செலவு எவ்வளவு..? வெளியான தகவல்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தல்களுக்கு அரசியல் கட்சிகள் செலவு செய்த தொகை குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்ற தன்னார்வ அமைப்பு ஆய்வு செய்தது.

தேர்தல் கமிஷனில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த செலவின அறிக்கையை ஆய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக தேசிய மற்றும் பிராந்திய கட்சிகள் என 32 கட்சிகளின் செலவின தொகை தெரியவந்து இருக்கிறது.

அதன்படி மேற்படி தேர்தல்களுக்காக இந்த கட்சிகள் மொத்தம் ரூ.3,352.81 கோடி செலவு செய்துள்ளன. தேசிய கட்சிகள் அதிகபட்சமாக ரூ.2,204 கோடி செலவு செய்திருக்கின்றன.

இதில் அதிகபட்ச தொகையை மத்தியில் ஆளும் பா.ஜனதா செலவிட்டு இருக்கிறது. அதாவது நாடாளுமன்றம் மற்றும் 4 சட்டமன்ற தேர்தல்களுக்காக சுமார் ரூ.1,494 கோடியை பா.ஜனதா செலவழித்து இருக்கிறது. இது கட்சிகளின் மொத்த செலவினத்தில் 44.56 சதவீதம் ஆகும்.

அடுத்ததாக காங்கிரஸ் கட்சி ரூ.620 கோடி அதாவது 18.5 சதவீதம் செலவழித்து இருக்கிறது. கட்சிகள் செலவு செய்த தொகையில் அதிகபட்ச தொகை விளம்பரத்துக்கு செலவிடப்பட்டு உள்ளது. அந்தவகையில் ரூ.2,008 கோடியை அரசியல் கட்சிகள் விளம்பரத்துக்காக செலவிட்டு உள்ளன.

அடுத்ததாக பயண செலவினம் மிகப்பெரிய காரணியாக அமைந்து இருக்கிறது. ஒட்டுமொத்தமாக ரூ.795 கோடி இதற்காக செலவிடப்பட்டு உள்ளது. கட்சிகள் தங்கள் வேட்பாளர்களுக்கு ரூ.402 கோடி வழங்கி இருக்கின்றன.

இந்த தேர்தலில் பெரும்பாலான கட்சிகள் செலவின அறிக்கை தாக்கல் செய்திருந்தாலும் 21 கட்சிகள் மேற்படி ஆய்வு நடத்துவது வரை தாக்கல் செய்யவில்லை.

அந்தவகையில் தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, உத்தவ் சிவசேனா, ராஷ்ட்ரீய ஜனதாதளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), கேரளா காங்கிரஸ் (எம்), ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற கட்சிகள் தங்கள் செலவின அறிக்கையை வழங்கவில்லை.

இதில் முக்கியமாக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் கேரள காங்கிரஸ் (எம்.) போன்ற கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டபோதும், பூஜ்ஜிய செலவினத்தை காட்டி உள்ளன.

முன்னதாக தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வெளிப்படைத்தன்மை வழிகாட்டுதல்களின்படி, தேர்தல்களில் கருப்புப் பணப் பயன்பாட்டைக் குறைக்க, முடிந்தவரை, காசோலைகள் அல்லது DD (டிமாண்ட் டிராப்ட்) அல்லது RTGS வழியாக பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே செலவினங்களை மட்டுப்படுத்த வேண்டும் என்று அறிக்கை தெரிவித்தது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com