

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, ராமர் கோவில் பிரச்சினை தொடர்பான வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு 2010-ம் ஆண்டு பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 அமைப்புகள் சமமாக பகிர்ந்துகொள்ளும்படி தீர்ப்பு அளித்தது. அதாவது அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அஹாரா மற்றும் ராம் லல்லா என்ற அமைப்புகள் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல்சாசன அமர்வு அமைக்கப்பட்டது. விசாரணை வெவ்வேறு காரணங்களால் ஒத்திவைக்க நேரிடுகிறது. இதற்கிடையே அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு இந்து அமைப்பினர் வலியுறுத்தலை முன்வைத்தனர்.
இதனையடுத்து அயோத்தியில் கூடுதலாக கையகப்படுத்திய 67 ஏக்கர் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்க அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு புதிய மனு தாக்கல் செய்தது. இதனை அரசியல் வித்தையென எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இந்நிலையில் அயோத்தியில் சரியான இடத்தில் கோவிலை கட்ட நாங்கள் விரும்புகிறோம் என பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அலிகார்க்கில் பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் பேசிய அமித்ஷா, ராம ஜென்ம பூமியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது. ராமர் கோவிலை கட்ட நாங்கள் நிலத்தை கேட்டுள்ளோம் என கூறியுள்ளார்.