

கொல்கத்தா,
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 92.88 சதவீத வாக்குகள் பதிவானது. இதையடுத்து எஞ்சிய 142 தொகுதிகளுக்கு வரும் 29ம் தேதி 2ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 2ம் கட்ட தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், மேற்குவங்காளத்தின் நதியா மாவட்டம் தஹாடாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா இன்று பிரசாரம் மேற்கொண்டார். பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது,
மம்தா பானர்ஜியின் அரசுக்கு முதற்கட்ட தேர்தலின்போதே வாக்காளர்கள் முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர். கடந்த 23ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலிலேயே பாஜக 110 தொகுதிகளில் வெற்றிபெற்றுவிட்டது. மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த உடன் இங்கு நடைபெறும் காட்டாட்சிக்கு முடிவுகட்டப்படும்.
வாக்காளர்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. வாக்காளர்களாகிய நீங்கள் வாக்களிப்பதை யாராலும் தடுக்க முடியாது. மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த உடன் மாநிலத்தில் பதுங்கியுள்ள ஊடுருவல்காரர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’
இவ்வாறு அவர் கூறினார்.