கர்நாடகாவில் கூட்டணி அரசை கவிழ்க்கும் பா.ஜ.க.வின் முயற்சி வெற்றியடையாது; மல்லிகார்ஜுன கார்கே

கர்நாடகாவில் கூட்டணி அரசை கவிழ்க்கும் பா.ஜ.க.வின் முயற்சி வெற்றியடையாது என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
கர்நாடகாவில் கூட்டணி அரசை கவிழ்க்கும் பா.ஜ.க.வின் முயற்சி வெற்றியடையாது; மல்லிகார்ஜுன கார்கே
Published on

கலபுரகி,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் மந்திரி பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி மீதும், கட்சி மீதும் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சி அமைக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. இதற்காக பா.ஜனதா ஆபரேஷன் தாமரை திட்டத்தை செயல்படுத்தி வருவதாக கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

கர்நாடக சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று மதியம் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவசரம், அவசரமாக பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அவர் பத்திரிகையாளர்களிடம், ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ. நாகனகவுடாவை இழுக்க பா.ஜனதாவினர் பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்ட கூறினார். மேலும் இந்த பேரம் தொடர்பான ஆடியோவை அவர் வெளியிட்டார்.

அந்த ஆடியோவில் நாகனகவுடா எம்.எல்.ஏ.வை பா.ஜனதாவுக்கு இழுக்க அவரது மகன் ஷரண் கவுடாவுடன் எடியூரப்பா பேரம் பேசுவது இடம்பெற்று இருந்தது. பிரதமர் மோடிக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என குற்றச்சாட்டு கூறிய குமாரசாமி, இந்த ஆடியோ அடங்கிய கேசட் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த நிலையில், கலபுரகியில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய மக்களவைக்கான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்கும முயற்சியில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெறாது.

முதல் அமைச்சர் வெளியிட்ட ஆடியோ பதிவில் உள்ள ஆளுங்கட்சியின் உறுப்பினர்களை அவர்கள் பக்கம் இழுக்க முயன்ற விவகாரம் தீவிரம் வாய்ந்தது. இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com