

பெங்களூரு,
கர்நாடகத்தில் உப்பள்ளி-தார்வார், பெலகாவி, கலபுரகி ஆகிய 3 மாநகராட்சிகளில் கடந்த 3-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 3 மாநகராட்சிகளிலும் பா.ஜனதா, காங்கிரஸ் போட்டியிட்டது. உப்பள்ளி-தார்வார், கலபுரகியில் ஜனதா தளம் (எஸ்) போட்டியிட்டது. பெலகாவியில் தேசிய கட்சிகளுக்கு இணையாக மராட்டிய எகிகிரண் சமிதி (எம்.இ.எஸ்.) அமைப்பு வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த தேர்தல் களத்தில் மொத்தம் 1,105 வேட்பாளர்கள் இருந்தனர்.
இந்த் சூழலில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதல், உப்பள்ளி-தார்வார், பெலகாவி ஆகிய 3 மாநகராட்சிகளிலும் ஆளும் பா.ஜனதா கட்சி அதிக வார்டுகளில் முன்னிலையில் இருந்து வந்தது. பின்னர் பெலகாவியில் பலம் வாய்ந்த எம்.இ.எஸ். அமைப்பு பின்னுக்கு தள்ளப்பட்டது. முதல் முறையாக பெலகாவி மாநகராட்சியை பா.ஜனதா அதிக வார்டுகளில் வெற்றி பெற்று கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. இதன் மூலம் அங்கு நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தி வந்த எம்.இ.எஸ். அமைப்பு படுதோல்வி அடைந்தது. அதே போல் உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியிலும் 39 வார்டுகளில் வெற்றி பெற்று பா.ஜனதா பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
அதே நேரத்தில் கலபுரகி மாநகராட்சியில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் பா.ஜனதா அங்கு 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கையின் இறுதியில், 82 வார்டுகளை கொண்ட உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியில் பா.ஜனதா 39 வார்டுகளிலும், காங்கிரஸ் 33 வார்டுகளிலும், ஜனதா தளம் (எஸ்) கட்சி ஒரு இடத்திலும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 3 இடங்களிலும், சுயேச்சைகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
58 வார்டுகளை கொண்ட பெலகாவி மாநகராட்சியில் பா.ஜனதா 35 வார்டுகளிலும், காங்கிரஸ் 10 வார்டுகளிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி ஒரு இடத்திலும், எம்.இ.எஸ். உள்பட பிற கட்சியினர் 12 இடங்களிலும் வெற்றி பெற்றனர். 55 வார்டுகளை கொண்ட கலபுரகியில் காங்கிரஸ் 27 வார்டுகளிலும், பா.ஜனதா 23 வார்டுகளிலும், ஜனதா தளம் (எஸ்) 4 இடங்களிலும், ஒரு சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.
அது தவிர 20 நகர உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த 21 வார்டுகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 8 வார்டுகளில் காங்கிரசும், 7 வார்டுகளில் பா.ஜனதாவும், 3 வார்டுகளில் ஜனதா தளம் (எஸ்) கட்சியும், 3 வார்டுகளில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர்.
ஆகமொத்தம் 272 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 117 வார்டுகளில் பா.ஜனதாவும், 103 வார்டுகளில் காங்கிரசும், 16 வார்டுகளில் ஜனதா தளம் (எஸ்) கட்சியும், பிற கட்சிகள் உள்பட சுயேச்சைகள் 36 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் 3 மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றதற்கு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், உப்பள்ளி-தார்வார், பெலகாவி மற்றும் கலபுரகி ஆகிய மூன்று மாநகராட்சித் தேர்தல்களில் பாஜகவை வெற்றிபெற செய்த கர்நாடக மக்களுக்கு நன்றி. பசவராஜ் பொம்மை, நளின் கடீல் மற்றும் வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் வாழ்த்துக்கள். பா.ஜ.க. கடந்த முறை வென்றதை விட பெரிய வெற்றியை உறுதி செய்துள்ளது என்று ஜே.பி.நட்டா பதிவிட்டுள்ளார்.