

பெங்களூரு,
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு எதிராக இழிவான குற்றச்சாட்டுகளைக் கொண்ட செய்தித்தாள் விளம்பரங்களை வெளியிட்டதாக கூறி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த விளம்பரங்களில் அப்போதைய பா.ஜ.க. அரசை ‘40 சதவீத கமிஷன் அரசு’ என விமர்சித்து பொதுக் கொள்முதல், ஒப்பந்தப் பணிகள் ஒதுக்கீடு மற்றும் கொரோனா நிவாரண பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளில் கமிஷன் வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும் பா.ஜ.க. அரசு ரூ.1,500 கோடி ஊழலில் ஈடுபட்டதாக அந்த விளம்பரங்களில் கூறப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து 2023-ம் ஆண்டு மே மாதம் கர்நாடக காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக ஒரு பா.ஜ.க. தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2024-ம் இந்த வழக்கு தொடர்பாக குற்றவியல் அவதூறு வழக்குகளைப் பதிவு செய்யுமாறு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக காங்கிரஸ் கட்சி, டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் கர்நாடக ஐகோர்ட்டை அணுகினர்.
இந்த வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, தற்போதைய கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் மற்றும் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிராக பா.ஜ.க. தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.