இடைத்தேர்தலில் பாஜக அபார வெற்றி: மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றியை வழங்கிய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் பாஜக அபார வெற்றி: மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
Published on

புதுடெல்லி,

மத்திய பிரதேசம் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 58 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பெரும்பாலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றியை வழங்கிய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி அவரது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்தியபிரதேச மக்கள் இன்று மாநிலத்தின் நிலையான, வலுவான அரசை தேர்வு செய்துள்ளனர். பா.ஜ.க மீது ம.பி., மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. ம.பி.,யில் சிவராஜ் சிங் தலைமையிலான அரசின் வளர்ச்சிப்பயணம் இன்னும் வேகம் எடுக்கும்.

உ.பி., இடைத்தேர்தலில் பா.ஜ.க மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. உ.பி., அரசின் முயற்சிகளுக்கு, இடைத்தேர்தல் முடிவுகள் அதிக உத்வேகத்தை அளிக்கும். யோகி அரசு, மாநில வளர்ச்சியில் புதிய உயரங்களை தொடும்.

தெலுங்கானா மாநிலம் துபாக்கா மற்றும் கர்நாடக மாநிலம் ஷிரா, ராஜராஜேஸ்வரா நகரில் பெற்ற வெற்றி வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இதற்காக பா.ஜ., கட்சியினர் கடுமையாக உழைத்தனர். பா.ஜ., வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் அவர்கள் நல்லபடியாக கொண்டு சேர்த்தனர். குஜராத்துடனான பா.ஜ.,வின் பிணைப்பு பிரிக்க முடியாதது. இடைத்தேர்தலில் 8 தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி.

ஜனநாயகத்தின் முதல் பாடத்தை பீகார் உலகிற்கு கற்பித்துள்ளது. ஜனநாயகம் எவ்வாறு பலப்படுத்தப்படுகிறது என்பதை இன்று பீகார் மீண்டும் உலகிற்கு தெரிவித்துள்ளது. பீகார் இளைஞர்கள், பெண்கள் எங்களை நம்பி ஓட்டளித்துள்ளனர். இந்த இளமை ஆற்றல், எங்களை முன்பை விட அதிகமாக உழைக்க ஊக்குவித்துள்ளது.பீகாரில் மாநில வளர்ச்சி மற்றும் ஒவ்வொருவரின் வளர்ச்சிக்காகவும், நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என மீண்டும் உறுதி அளிக்கிறேன். மக்களுக்கு என் நன்றிகள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com