மராட்டிய சட்டசபையில் பா.ஜனதா-சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மோதல்

மராட்டிய சட்டசபையில் பா.ஜனதா-சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் சட்டை காலரை பிடித்து சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மராட்டிய சட்டசபையில் பா.ஜனதா-சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மோதல்
Published on

நாக்பூர்,

மராட்டிய சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நாக்பூரில் நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் 2-வது நாளான நேற்று மாநிலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி பா.ஜனதா உறுப்பினர்கள் சட்டசபையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர்.

முந்தைய ஆட்சியின் போது, இந்த கோரிக்கையை வலியுறுத்தி சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் பிரசுரிக்கப்பட்டு இருந்த செய்தி அடங்கிய பதாகையை பா.ஜனதா எம்.எல்.ஏ. அபிமன்யு பவார் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயிடம் நெருங்கி சென்று காட்ட முயன்றார்.

இதை கவனித்த சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் அந்த பதாகையை அவரது கையில் இருந்து பறிக்க முயன்றார். இதில் இருவருக்கும் இடையே சட்டசபையில் மோதல் உண்டானது. ஒருவருக்கொருவர் சட்டை காலரை பிடித்துக்கொண்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முன்னால் எம்.எல்.ஏ.க்கள் இருவரும் மோதிக்கொண்டதால் சபையில் பரபரப்பு உண்டானது. உடனே சிவசேனா மந்திரிகளும், பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரிகளும் இருவரின் சண்டையை விலக்கி விட்டனர். அந்த நேரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.விடம் இருந்த பதாகையை சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சிலர் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனால் அமளி தொடரவே சபையை 30 நிமிடத்துக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் சட்டசபை கூடியபோதும் அமளி நீடித்ததால் சபையை நாள் முழுவதும் சபாநாயகர் நானா பட்டோலே ஒத்திவைத்தார்.

கடந்த முறை ஆளும் கட்சிகளாக இருந்த இந்த இரு கட்சிகளும் எதிர் துருவங்களாக மாறி சண்டையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com