

12 எதிர்க்கட்சிகள் ஆதரவு
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி, டெல்லி-அரியானா எல்லையில் உள்ள சிங்கு, திக்ரி ஆகிய இடங்களிலும், டெல்லி-உத்தரபிரதேச எல்லையில் உள்ள காசிப்பூலும் கடந்த நவம்பர் 26-ந் தேதியில் இருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்த போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்ததையொட்டி, மே 26-ந் தேதியை (நேற்று) நாடு முழுவதும் கருப்பு தினமாக அனுசரிக்குமாறு 40 விவசாய
சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்தது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
உருவபொம்மை எரிப்பு
இந்தநிலையில், நேற்று கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. ஆனால், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் மட்டுமே இதற்கு ஆதரவு காணப்பட்டது. டெல்லி காசிப்பூர் எல்லையில் பாரதீய கிசான் தலைவர் ராகேஷ் திகாயத் தலைமையில் குவிந்திருந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், கருப்புக்கொடிகளை கையில் ஏந்தி இருந்தனர்.மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் பதாகைகளையும் பிடித்திருந்தனர். ராகேஷ் திகாயத் தனது தலையில் கருப்பு தலைப்பாகை கட்டி இருந்தார். திடீரென அவரது தலைமையில் மத்திய அரசின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. கலவர தடுப்பு உடை அணிந்திருந்த டெல்லி போலீசார் அதை தடுக்க முயன்றபோது, தள்ளுமுள்ளு உருவானது.
கண்டன ஊர்வலம்
அதுபோல், சிங்கு எல்லையில், விவசாயிகள் கருப்புக்கொடி ஏற்றினர். தங்கள் வாகனங்களிலும் கருப்புக்கொடியை கட்டி இருந்தனர். அங்கு கண்டன ஊர்வலம் நடத்தி பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்தனர்.திக்ரி எல்லையிலும் விவசாயிகள் கருப்புக்கொடி ஏற்றியதுடன், மத்திய அரசு தலைவர்களின் உருவபொம்மையை எரித்தனர். 3 எல்லைகளிலும் டெல்லி போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர். அகாலிதளம் தலைவர் சுக்பிர்சிங் பாதல் தனது வீட்டில் கருப்புக்கொடி ஏற்றினார். வேளாண் சட்டங்களை வாபஸ்பெற வேண்டும் என்று அவர் மத்திய அரசை வலியுறுத்தினர்.சில இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன பேரணி நடத்தினர். பல இடங்களில், மத்திய அரசின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
அதுபோல், அண்டை மாநிலமான அரியானாவிலும் விவசாயிகள் தங்கள் வீடுகளிலும், வாகனங்களிலும் கருப்புக்கொடி ஏற்றினர். முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர்சிங் ஹூடா, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.