

பெங்களூரு,
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோய் பரவி வருகிறது. வடமாநிலங்களில் இந்த நோய்த்தொற்று பரவலாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனை தொடர்ந்து ராஜஸ்தான், தெலங்கானா போன்ற மாநிலங்கள் தொற்று நோயாக இந்நோயை அறிவித்துள்ளன. கருப்பு பூஞ்சை நோயை தமிழக அரசும் தொற்று நோயாக அறிவித்துள்ளது. இதேபோன்று ஒடிசா அரசு, கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோய்கள் சட்டம் 1897ன் கீழ் அறிவிக்கப்பட்ட ஒரு தொற்று நோயாக சேர்த்து உள்ளது.
இந்நிலையில், கர்நாடக சுகாதார மந்திரி சுதாகர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்துள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, இதுவரை 200 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அதற்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளை பெறும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு உள்ளோம். இதற்காக மத்திய மந்திரி சதானந்த கவுடாவுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். அவர் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன் என எங்களுக்கு உறுதி அளித்து உள்ளார் என கூறியுள்ளார்.