'தேர்தல் பத்திரங்கள் இல்லாவிட்டால் கருப்புப் பணம் உள்ளே வரும்' - நிதின் கட்கரி

பொருளாதாரத்தை உயர்த்த உதவும் என்ற எண்ணத்தில் தேர்தல் பத்திரங்கள் திட்டம் கொண்டு வரப்பட்டதாக நிதின் கட்கரி தெரிவித்தார்.
'தேர்தல் பத்திரங்கள் இல்லாவிட்டால் கருப்புப் பணம் உள்ளே வரும்' - நிதின் கட்கரி
Published on

புதுடெல்லி,

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15-ந்தேதி ரத்து செய்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி மற்றும் நிதியை கொடுத்தவர்களின் விவரங்களை வெளியிடவும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் தெடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி வழங்கியது. இதைத் தொடர்ந்து எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இந்த நிலையில் தேர்தல் பத்திரங்கள் இல்லாவிட்டால் கருப்புப் பணம் உள்ளே வரும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது;-

"தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு கட்சிக்கும் பணம் தேவை என்பது உண்மை. அந்த பணத்தை பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெறுவது பொருளாதாரத்தை உயர்த்த உதவும் என்ற எண்ணத்தில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து நான் கருத்து கூற மாட்டேன். இருப்பினும் தேர்தல் பத்திரங்கள் தடை செய்யப்பட்டால், கருப்புப் பணம் உள்ளே வரும். தேர்தல் பத்திரங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றால், பணம் பெறுவதற்கு வேறு வழிகளை தேர்ந்தெடுப்பார்கள். அது நிச்சயம் நடக்கும்.

வளர்ச்சியையும், வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் உருவாக்கும் பணத்தை எப்படி கருப்புப் பணம் என்று அழைக்க முடியும்? நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டு வேறு இடங்களில் பதுக்கப்படும் பணம்தான் பிரச்சனையானது."

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com