

ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கான்களி கிராமத்தில் ஹம் சாத் சாத் ஹயன் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு 1998-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி நடந்த போது, அங்கிருந்த சல்மான்கான் உள்ளிட்ட பல நடிகர்கள் அரிய வகை இரண்டு மான்களை வேட்டையாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நடிகர் சயீப்அலிகான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. ஜோத்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த மாதம் 5-ம் அறிவிக்கப்பட்ட தீர்ப்பில், சல்மான்கானுக்கு 10 ஆயிரம் அபராதத்துடன் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சல்மான்கானை தவிர குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனை அடுத்து, ஜோத்பூர் மத்திய சிறையில் சல்மான்கான் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு நாட்களில் அவர் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என சல்மான்கான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதற்காக சல்மான்கான் ஜோத்பூர் நீதிமன்றம் வந்தார். சல்மான்கான் வருகையையொட்டி நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது, அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணையை ஜூலை மாதம் 17-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.