

முசாபர்நகர்,
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் காச்சி சடாக் என்கிற இடத்தில் பழைய இரும்பு கடை உள்ளது. நேற்று ஊழியர்கள் வழக்கம் போல் கடையை திறந்து வேலைபார்த்து கொண்டிருந்தனர். பொதுமக்கள் சிலர் பழைய பொருட்களை கொடுத்து பணம் பெறுவதற்காக கடைக்கு வந்திருந்தனர்.
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் கடையில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. குண்டுவெடிப்பில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் ஒரு பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
குண்டுவெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார், தீயணைப்புபடை வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புபணியில் இறங்கினர். படுகாயம் அடைந்த நபர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையில் போலீஸ் உயர் அதிகாரிகள், பயங்கரவாத தடுப்புபடையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் வெடிகுண்டு செயலழிப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் வெடிக்காத குண்டுகள் மேலும் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.