பாஜக அதிருப்தி எம்.பி சத்ருகன் சின்கா இல்லத்தின் ஒரு பகுதி மாநகராட்சி அதிகாரிகளால் உடைப்பு

பாஜக அதிருப்தி எம்.பி சத்ருகன் சின்கா இல்லத்தின் ஒரு பகுதி மாநகராட்சி அதிகாரிகளால் உடைக்கப்பட்டது. #BMC | #shatrughanSinha
பாஜக அதிருப்தி எம்.பி சத்ருகன் சின்கா இல்லத்தின் ஒரு பகுதி மாநகராட்சி அதிகாரிகளால் உடைப்பு
Published on

மும்பை,

பாஜக அதிருப்தி நிலைப்பாட்டில் உள்ள அக்கட்சி எம்.பி சத்ருகன் சின்கா, மும்பையில் உள்ள ரம்யான் என்ற பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். எட்டு மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் சத்ருகன் சின்கா குடும்பத்தினர் மட்டுமே வசித்து வருகின்றனர். சத்ருகன் சின்காவின் மகளும் நடிகையுமான சோனாக்ஷி சின்காவும் இந்த இல்லத்தில்தான் வசித்து வருகிறார். இந்த சூழலில், சத்ருகன் சின்கா தனது இல்லத்தில் அனுமதிக்கு மாறாக சட்ட விரோதமாக கூடுதல் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டுள்ளதாக கூறி, தனது இல்லத்தின் சில பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் உடைத்தனர்.

மாநகராட்சி பணியாளர்கள் கட்டிடத்தை உடைக்கும் பொழுது சத்ருகன் சின்காவும் இல்லத்தில் தான் இருந்தார். சத்ருகன் சின்காவில் இல்லத்தில் இருந்த இரண்டு கழிவறைகள், சமையலறை உள்ளிட்ட மேலும் சில பகுதிகள் அனுமதி பெற்றதற்கு மாறாக கட்டப்பட்டு இருந்ததாக கூறிய மாநகராட்சி அதிகாரிகள் அவற்றை இடித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் கடமையை ஆற்ற முழு ஒத்துழைப்பு அளித்ததாக கூறிய சத்ருகன் சின்கா, மாநகராட்சியிடம் அனுமதி பெற்று மீண்டும் கட்டுமானப்பணிகளை உரிய விதிகளின் படி மேற்கொள்வோம் என்றார். அப்போது, செய்தியாளர்கள் சத்ருகன் சின்காவிடம், நீங்கள் யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிப்பதால்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என கருதுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் எதுவும் அளிக்காமல் பலமாக சிரித்துவிட்டு சத்ருகன் சின்கா அங்கிருந்து கிளம்பினார்.

முன்னதாக, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வரும் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் நிதி மந்திரியுமான யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவாக சத்ருகன் சின்கா குரல் கொடுத்து இருந்தார். பாரதீய ஜனதாவுக்கு எதிராக அக்லோவில் நடைபெற்ற பேரணிக்கு யஷ்வந்த் சின்கா தலைமை வகித்தார். டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெற்ற இந்த பேரணிக்கு சத்ருகன் சின்கா ஆதரவு கொடுத்தார். ஆனால், இதற்கு மறுநாளே, மும்பை மாநகராட்சி அதிகாரிகள், சத்ருகன் சின்காவுக்கு, சட்டவிரோத கட்டுமானப்பணிகள் குறித்து நோட்டீஸ் அனுப்பியது கவனிக்கத்தக்கது.

ஆனால், இதுபற்றி விளக்கம் அளித்துள்ள மும்பை மாநகராட்சி அதிகாரிகள், சத்ருகன் சின்கா, விதிகளுக்கு புறம்பாக கூடுதல் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு உள்ளதாக தங்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக புகார் வந்தது. மராட்டிய நகர திட்டமயமாக்கல் சட்டத்தின் 53-வது பிரிவின் படி நோட்டீஸ் விடுக்கப்பட்டது இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். #BMC | #shatrughanSinha

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com