பிரம்மபுத்திரா நதியில் 2 படகுகள் மோதி விபத்து; பலர் மாயம் - தேடும் பணி தீவிரம்

பிரம்மபுத்திரா நதியில் 2 படகுகள் மோதிய விபத்தில் பலர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரம்மபுத்திரா நதியில் 2 படகுகள் மோதி விபத்து; பலர் மாயம் - தேடும் பணி தீவிரம்
Published on

ஜோர்க்த்,

அசாமின் ஜோர்க்த் மாவட்டம் நிமதி காட் அருகே பிரம்மபுத்திரா நதியில் சென்றுகொண்டிருந்த இரண்டு படகுகள் இன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ஒரு படகு நிலைகுலைந்து ஆற்றில் கவிழ்ந்து மூழ்கியது. அதில் பயணித்த பயணிகள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

படகு விபத்து குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, இந்த சம்பவம் வேதனை அளிப்பதாக கூறி உள்ளார். மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படி மஜூலி மற்றும் ஜோர்கத் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் பிமல் போராவை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பியிருப்பதாகவும், நிமதி காட் பகுதிக்கு நாளை நேரில் சென்று பார்வையிட உள்ளதாகவும் கூறி உள்ளார்.

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, அசாம் முதல்-மந்திரியை தொடர்பு கொண்டு விபத்து குறித்து விசாரித்துள்ளார்.

ஆற்றில் மூழ்கிய படகில் 50 பேர் வரை பயணித்திருக்கலாம் என்றும், 40 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும் ஜோர்கத் கூடுதல் துணை கமிஷனர் தெரிவித்துள்ளார். ஆனால் எத்தனைபேர் பயணித்தார்கள்? எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர்? என்ற முழுமையான விவரம் வெளியாகவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com