விபத்து எதிரொலி; போயிங் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு

ஹைட்ராலிக் சோதனை உள்பட 6 வகையான சோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 டிரீம்லைனர்' விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். இந்த கோர விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
விமானத்தில் இருந்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை சேர்ந்தவர் ஒருவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள் என 'ஏர் இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான விபத்தை தொடர்ந்து 'ஏர் இந்தியா' நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அந்நிறுவனத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் 'போயிங்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 'ஏர் இந்தியா' நிறுவனம் இயக்கும் போயிங் 787-8/9 ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி ஹைட்ராலிக் சோதனை உள்பட 6 வகையான சோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விமானத்தின் எரிபொருள், மின்னணு கட்டுப்பாடு சார்ந்த அமைப்புகளை 15 நாட்களுக்கு ஆய்வு செய்ய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






