போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு: சி.பி.ஐ. மேல்முறையீடு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

போபர்ஸ் பீரங்கி ஊழலில் சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு: சி.பி.ஐ. மேல்முறையீடு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

மறைந்த காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இந்திய ராணுவத்துக்கு சுவீடன் நாட்டின் ஏ.பி. போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து 400 போபர்ஸ் பீரங்கிகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. 1986-ம் ஆண்டு, மார்ச் மாதம் 24-ந் தேதி போடப்பட்ட இந்த ஒப்பந்தம் ரூ.1,437 கோடி மதிப்பிலானது.

1987-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி சுவீடன் வானொலி செய்தியில், போபர்ஸ் பீரங்கி வினியோகம் செய்வதற்கு இந்தியாவின் ஆர்டர் கிடைப்பதற்காக அரசியல் தலைவர்களுக்கும், ராணுவ உயர் அதிகாரிகளுக்கும் போபர்ஸ் நிறுவனம் ரூ.64 கோடி லஞ்சம் அளித்ததாக கூறப்பட்டது.

இந்த ஊழல் இந்திய நாட்டையே உலுக்கியது. இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி ஏ.பி. போபர்ஸ் நிறுவனத்தின் அப்போதைய தலைவரான மார்ட்டின் அர்த்போ, இடைத்தரகர்களாக செயல்பட்ட வின் சத்தா, இந்துஜா சகோதரர்கள் உள்ளிட்டவர்கள் மீது 1990-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 22-ந் தேதி வழக்கு பதிவு செய்தது.

1999-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 22-ந் தேதி இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கலானது. அதில், ராஜீவ் காந்தி, வின் சத்தா, குவாத்ரோச்சி, பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த பட்நாகர், மார்ட்டின் அர்த்போ மற்றும் போபர்ஸ் நிறுவனம் உள்ளிட்டோர் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

மறு ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி இந்துஜா சகோதரர்களான எஸ்.பி. இந்துஜா, ஜி.பி. இந்துஜா, பி.பி. இந்துஜா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் குவாத்ரோச்சியை இத்தாலியில் இருந்து நாடு கடத்திக்கொண்டு வருவதற்காக ஏற்கனவே நாடு ரூ.250 கோடி செலவழித்த நிலையில், மேலும் செலவு செய்ய முடியாது என்று கூறி அவரை வழக்கில் இருந்து விடுவித்து டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு 2011-ம் ஆண்டு, மார்ச் மாதம் 4-ந் தேதி உத்தரவிட்டது.

எஞ்சியவர்கள் மீதான வழக்கை டெல்லி ஐகோர்ட்டு விசாரித்தது. இதில் லஞ்ச குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜீவ் காந்தியை டெல்லி ஐகோர்ட்டு, 2004-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந் தேதி விடுவித்து விட்டது. மற்றவர்கள் மீது நடத்திய விசாரணைக்கு பின்னர் இந்துஜா சகோதரர்களான எஸ்.பி. இந்துஜா, ஜி.பி. இந்துஜா, பி.பி. இந்துஜா உள்ளிட்டோரை விடுவித்து 2005-ம் ஆண்டு உத்தரவிட்டது. உத்தரவு வெளியான 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் சுமார் 13 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல் முறையீடு செய்தது.

இந்த மேல் முறையீடு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 4 ஆயிரத்து 500 நாட்கள் தாமதத்துக்கு பின்னர் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்து இருப்பதை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் முறையிடப்பட்டது.

ஆனால் அதை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர். சி.பி.ஐ., மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே நேரத்தில் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து வக்கீல் அஜய் அகர்வால் (ரேபரேலியில் சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிட்டவர்) தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு வழக்கில் சி.பி.ஐ. தனது தரப்பு வாதத்தை எடுத்து வைக்கலாம் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அப்போது அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், சி.பி.ஐ. மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து பிறப்பிக்கிற உத்தரவில், இப்படி தள்ளுபடி செய்வது இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை தடுக்காது என்று குறிப்பிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் இது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன. போபர்ஸ் ஊழல் வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com