கொரோனாவுக்கு 17 நாட்களாக சிகிச்சை: பாலிவுட் பாடகி கனிகா கபூர் குணமடைந்து வீடு திரும்பினார்

கொரோனா வைரசுக்கு 17 நாட்களாக சிகிச்சை பெற்ற பாலிவுட் பாடகி கனிகா கபூர் குணமடைந்தார். அவர் நேற்று வீடு திரும்பினார்.
கொரோனாவுக்கு 17 நாட்களாக சிகிச்சை: பாலிவுட் பாடகி கனிகா கபூர் குணமடைந்து வீடு திரும்பினார்
Published on

லக்னோ,

பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர், கடந்த மாதம் வெளிநாட்டுக்கு சென்று திரும்பினார். அதன்பிறகு அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்படத் தொடங்கின.

தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியதை பொருட்படுத்தாமல், உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் அடுத்தடுத்து 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதில் ஒரு விருந்தில், எம்.பி.க்கள், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, உத்தரபிரதேச மாநில சுகாதார மந்திரி ஜெய்பிரதாப் சிங் உள்ளிட்ட மூத்த அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே, கனிகாகபூருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால், அவர் கடந்த மாதம் 20-ந் தேதி, லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த அரசியல்வாதிகள் அனைவரும் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்த வேண்டியதாகி விட்டது. நல்லவேளையாக, அவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

ஆஸ்பத்திரியில் முதலில் கனிகா கபூர் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. கண்டிப்பு காட்டிய பிறகே அவர் ஒத்துழைப்பு வழங்கினார். மேலும், கொரோனா வைரஸ் விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டு, மற்றவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக கனிகா கபூர் மீது லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே, 2 வார காலத்துக்கு மேல் சிகிச்சை முடிந்தநிலையில், நேற்று முன்தினம் 7-வது முறையாக கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியாகின.

அதில், நெகட்டிவ் என்று வந்தது. அதாவது, அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்தது. அதற்கு முன்பு எடுக்கப்பட்ட பரிசோதனையிலும், பாதிப்பு இல்லை என்றே வந்தது.

எனவே, தொடர்ந்து 2 பரிசோதனைகளில் பாதிப்பு இல்லை என்று வந்ததால் கனிகா கபூர் குணம் அடைந்தார். இதையடுத்து, அவர் நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும், 14 நாட்கள் அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com