அகமதாபாத்தில் தரையிறங்கிய சர்வதேச விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

விமானத்தின் ஒரு இருக்கைக்கு அடியில் இருந்து மிரட்டல் கடிதம் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அகமதாபாத்,
கடந்த சில நாட்களாக பள்ளிகள், விமான நிலையங்கள், விமானங்கள், கல்லூரிகள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைத்துள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய ஒரு சர்வதேச விமானத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமானத்தின் ஒரு இருக்கைக்கு அடியில் இருந்து மிரட்டல் கடிதம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து உள்ளூர் காவல்துறை, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் விமானத்தை சோதனை செய்தனர். அந்த சோதனையில், இதுவரை சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தொடர்ந்து சோதனை நடந்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக குற்றப்பிரிவு காவல் துறையின் இணை ஆணையர் ஷரத் சிங்கால் கூறுகையில், "ஜெட்டாவிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த விமானம் இன்று காலை அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அனைத்து பயணிகளும் இறங்கிய பிறகு, துப்புரவு ஊழியர்கள் விமானத்தை சுத்தம் செய்ய சென்றபோது ஒரு இருக்கைக்கு அடியில் இருந்து மிரட்டல் கடிதம் கண்டெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விமானத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. அந்த கடிதத்துடன் ஒவ்வொரு பயணியின் கைரேகைகள் மற்றும் கையெழுத்தை ஒப்பிட்டு பார்த்து வருகிறோம்" என்றார்.






