விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

விழிஞ்ஞம் துறைமுகத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச துறைமுகத்தை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக அவர் நேற்று இரவு விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.
இதற்கிடையே நேற்று விழிஞ்ஞம் துறைமுக அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மலப்புரத்தில் இருந்து இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரதமர் மோடி பங்கேற்கும் விழா மேடை உள்பட விழிஞ்ஞம் பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், கோர்ட்டுகள், ஓட்டல்கள், விமான நிலையம், முதல்-மந்திரியின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த நிலையில் பிரதமர் மோடி திறந்து வைக்கும் விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Live Updates
- 2 May 2025 6:03 PM IST
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்று வரும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 525 தேர்தல் வாக்குறுதிகளை அளித்து, 15 சதவீதம் கூட நிறைவேற்றாத திமுகவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.






