கேரளாவில் தாயின் 2வது கணவரின் தாக்குதலில் இருந்து தம்பியை காக்க முயன்ற 7 வயது சிறுவன் உயிரிழப்பு

கேரளாவில் தாயின் 2வது கணவரின் தாக்குதலில் இருந்து தம்பியை காக்க முயன்ற 7 வயது சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளான்.
கேரளாவில் தாயின் 2வது கணவரின் தாக்குதலில் இருந்து தம்பியை காக்க முயன்ற 7 வயது சிறுவன் உயிரிழப்பு
Published on

கொச்சி,

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா பகுதியில் வசித்து வந்த பெண்ணுக்கு 7 வயது மற்றும் 4 வயதில் இரண்டு மகன்கள் இருந்தனர். இவரது கணவர் கடந்த 10 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.

இதனை அடுத்து இவருடன் அருண் ஆனந்த் (வயது 36) என்பவர் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 28ந்தேதி அதிகாலையில் அந்த துயர சம்பவம் நடந்தது. அந்த பெண்ணின் 4 வயது மகன் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டான் என கூறி அதிகாலை 3 மணியளவில் ஆனந்த் அதற்கு தண்டனையாக அடித்து, உதைத்து உள்ளான்.

இதனை கண்ட 7 வயது சிறுவன் தம்பியை அடியில் இருந்து காப்பதற்காக முயன்றுள்ளான். அவனை ஆனந்த் தூக்கி தரையில் வீசியுள்ளான். அவனது தலையை அலமாரி மீது மோத செய்ததுடன், ஊன்றுகோல் கொண்டு அடித்துள்ளான்.

இதில் அந்த சிறுவனின் மண்டையோடு விரிசல் அடைந்தது. நுரையீரல் காயமடைந்ததுடன், ரத்த கசிவும் ஏற்பட்டு உள்ளது. உடல் முழுவதும் கீறல்களும், காயங்களும் ஏற்பட்டு உள்ளன. அவனது தம்பிக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனந்த் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் அவனை கைது செய்தனர்.

அந்த சிறுவனை கடந்த திங்கட்கிழமை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் நேரில் சென்று கவனித்து மருத்துவ குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். சிறுவனின் நிலைமை மிக மோசமடைந்துள்ளது என கூறிய விஜயன், சிறுவனுக்கு அனைத்து சாத்தியப்படும் நிபுணர்களின் சிகிச்சைகளை வழங்கும்படி உத்தரவிட்டார். அரசே சிகிச்சைக்கான செலவை ஏற்கும் என கூறினார்.

கடந்த 8 நாட்களுக்கு பின் மருத்துவமனையில் அளித்த சிகிச்சை பலனின்றி இன்று காலை 11.30 மணியளவில் சிறுவன் உயிரிழந்து விட்டான்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com