நெல்லை சாலையில் சிறுவன் செய்த சாகசம்: வைரலாகி வரும் வீடியோ

தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா வெளியிட்ட, தமிழகத்தின் நெல்லை சாலையில் உடலை வளைத்து, டைவ் அடித்து சிறுவன் சாகசம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
நெல்லை சாலையில் சிறுவன் செய்த சாகசம்: வைரலாகி வரும் வீடியோ
Published on

புதுடெல்லி,

இந்தியாவின் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா தனது டுவிட்டரில் பல ஆச்சரியமளிக்கும், அதிசயத்தக்க விசயங்களை வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பலரால் ரசிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், தமிழகத்தின் திருநெல்வேலி சாலையில் சிறுவன் ஒருவன் தன் உடலை வளைத்து செய்த சாகச காட்சிகள் இடம் பெற்று உள்ளன. அவனை சுற்றி பார்வையாளர்களாக மக்கள் பலர் உள்ளனர்.

இதுபற்றி ஆனந்த் மகிந்திரா பதிவிட்ட தலைப்பில், காமன்வெல்த் 2022ம் ஆண்டுக்கான போட்டிகளில் இந்தியா தங்க பதக்கங்களை அள்ளி குவித்த நிலையில், திறமைக்கான அடுத்த தலைமுறை செதுக்கப்பட்டு வருகிறது. ஆதரவு கிடைக்காத நிலை.

இந்த திறமைகளை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை நமக்கு உள்ளது என தெரிவித்து உள்ளார். இந்த வீடியோவை வெளியிட்ட பின்னர் டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் அதனை ரசித்து, பல விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். சிறுவனின் திறமையையும் பாராட்டி உள்ளனர்.

அதில் ஒருவர், சிறுவனுக்கு நிதியுதவி செய்யும்படி ஆனந்த் மகிந்திராவை வலியுறுத்தியுள்ளதுடன், சிறுவன் தனது திறமைகளை வளர்த்து கொள்ள உதவும்படியும் கேட்டு கொண்டுள்ளார். அதன்பின்னரே காமன்வெல்த் போட்டிகளில் ஒரு நாள் ஜொலிக்க முடியும் என தெரிவித்து இருக்கிறார்.

அதில் ஒருவர், விளையாட்டில் பாரத நாட்டின் இதுவரை பயன்படுத்தப்படாத ஆற்றல் இது என தெரிவித்து உள்ளார். ஈர்க்கும் வகையிலான சிறந்த திறமை என்றொருவர் விமர்சித்து உள்ளார். அடுத்த தலைமுறை... சிறுவனின் திறமையை கண்டு வியந்து போனேன். இந்திய தடகள வீரர்களின் பிரகாசமடையும் புதிய வருங்காலம். இந்த சிறுவன் கண்டறியப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று ஒரு நபர், இந்திய கிராமங்களில் இதுபோன்ற பல திறமைகள் நிறைந்தவர்கள் காணப்படுகின்றனர். அவர்களை அங்கீகரித்து, சிறந்த முறையில் வளர்த்தெடுக்க வேண்டும். கிராமத்தில் குளங்களிலும், ஆறுகளிலும் சிறுவர்கள் விரைவாக நீந்தி செல்வார்கள். ஒரு தீவிர இந்திய விளையாட்டு ரசிகராக, இந்த விசயத்தில் கூட்டு முயற்சி நமக்கு அவசியம் என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com