

அசம்கர்,
திரிபுரா மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ரஷ்ய புரட்சியாளர் லெனின் சிலையை பாஜக தொண்டர்கள் உடைத்தனர். இதன் நீட்சியாக தமிழகத்திலும் சில இடங்களில் பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.
நாடு முழுவதும் பெரும் விவாதப்பொருளாக இந்த விவகாரம் ஆனதையடுத்து, பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும், சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இதனால், மேற்கூறிய பிரச்சினை சற்று ஓய்ந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் அசம்கர் நகரில் அம்பேத்கர் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அம்பேத்கரின் முழு உருவச்சிலையில் தலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.