கேரளாவில் மேலும் ஒரு சிறுவனுக்கு 'அமீபிக்' மூளைக்காய்ச்சல்: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

சிறுவனின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக புனே வைரலாஜி ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கண்ணூர்,

கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவால் 'அமீபிக்' மூளைக்காய்ச்சல் என்ற அரிய வகை நோய் பரவி வருகிறது. கடந்த மே மாதம் மலப்புரத்தில் 5 வயது சிறுமி பத்வா, ஜூன் மாதம் கண்ணூரை சேர்ந்த 13 வயது சிறுமி தக்சினா, கடந்த 4-ந் தேதி கோழிக்கோடு ராமநாட்டுக்கரை பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் மிருதுல் (வயது 13) ஆகிய 3 பேர் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இதையடுத்து கோழிக்கோடு திக்கொடி பள்ளிக்கரை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன், திருச்சூர் அருகே பாடூர் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் ஆகிய 2 பேருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தநிலையில் கண்ணூர் அருகே பரியாரம் பகுதியை சேர்ந்த சிறுவன் கடந்த 10-ந் தேதி வீட்டின் அருகே உள்ள குட்டையில் குளித்து உள்ளான். அவனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பெற்றோர் சிறுவனை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து பரியாரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனது உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக புனே வைரலாஜி ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் முடிவில் சிறுவனுக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து சிறுவன் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது மே மாதத்திற்குப் பிறகு கேரளாவில் பதிவான ஆறாவது பாதிப்பாகும். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடந்த 5-ஆம் தேதி நடத்திய கூட்டத்தில், தொற்றுநோய்களைத் தடுக்க அசுத்தமான நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம் என்பது உள்பட பல ஆலோசனைகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com