சபரிமலை போல் மற்றொரு விவகாரம்; ஆண்கள் மட்டும் வணங்கும் கடவுளை வழிபட சென்ற பெண்

கேரளாவில் ஆண்கள் மட்டும் செல்ல கூடிய மலை பகுதிக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதியை அடுத்து கடவுளை வழிபட பெண் ஒருவர் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
சபரிமலை போல் மற்றொரு விவகாரம்; ஆண்கள் மட்டும் வணங்கும் கடவுளை வழிபட சென்ற பெண்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் 2வது உயரிய மலை சிகரம் என்ற பெருமையை பெற்றது அகஸ்தியர்கூடம். யுனெஸ்கோவால் பாரம்பரிய தலம் என அங்கீகரிக்கப்பட்ட இந்த மலை பகுதியில் பழங்குடியின மக்களின் கடவுளான அகஸ்திய முனி என்பவரின் சிலை நிறுவப்பட்டு உள்ளது. பழங்கால மரபின்படி, இங்கு சென்று வழிபடுவதற்கு ஆண்களுக்கே அனுமதி உள்ளது. இதனால் இந்த மலை பகுதிக்கு பெண்கள் யாரும் செல்வதில்லை.

இந்த நிலையில், கடந்த நவம்பரில் கேரள உயர் நீதிமன்றம் பெண்கள் செல்வதற்கு இருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இந்த மலையில் ஏறுவதற்காக 100 பேர் கொண்ட முதல் குழு இன்று காலை புறப்பட்டது. இதில், ஜீன்ஸ் மற்றும் சர்ட் அணிந்து, பேக் ஒன்றுடன் தன்யா சனல் என்ற பெண்ணும் புறப்பட்டு சென்றுள்ளார்.

அவர், பயணம் தொடங்குவதற்கு முன் கூறும்பொழுது, காட்டை பற்றி அதிகம் அறிந்து கொள்வதற்கும், இதில் கிடைக்கும் தனித்துவ அனுபவம் பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்வதற்கும் இந்த பயணம் உதவும் வகையில் இருக்கும் என கூறினார்.

பெண்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்ட பகுதிக்கு முதன்முறையாக பெண் ஒருவர் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின மக்கள் நாட்டுப்புற பாடல்களை படித்தபடி தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். எனினும் நீதிமன்ற உத்தரவை மதித்து அவர்களை தடுக்கவில்லை.

இந்த வருடத்தில் மலை பகுதிக்கு செல்ல 100 பெண்கள் உள்பட 4,700 பேர் பதிவு செய்துள்ளனர் என கேரள வன துறை தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com