

பெங்களூரு,
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்படுவதைப் போல கர்நாடக மாநிலம் மங்களூருவில் கம்பளா விளை யாட்டு (சேற்றில் எருமை காளையை விரட்டி செல்வது) கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விலங்கு நல அமைப்பினர் இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட போது, கம்பளா விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் ஜல்லிக் கட்டு நடத்தக்கோரி போராட்டம் நடைபெற்றது. இதை யடுத்து சட்டப்படி ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்துவதற்கு ஏதுவாக தமிழக அரசு அவசர சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதை பின்பற்றி, கர்நாடக அரசும் கம்பளா போட்டி நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும் என கம்பளா விளையாட்டு குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல், கர்நாடகாவில் உள்ள எதிர்க்கட்சிகளும் அம்மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. கர்நாடக பாரதீய ஜனதா தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான எடியூரப்பா, கம்பளா போட்டியை நடத்த கர்நாடக அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக முதல் மந்திரி சித்தராமையாவும், உரிய சட்ட ஆலோசனைகளுக்கு பிறகு தேவைப்பட்டால் கம்பளா போட்டியை நடத்த அவசர சட்டம் இயற்றப்படும் என்று தெரிவித்து இருந்தார்.