

லக்னோ,
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சிமாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாடு நடைபெற்று கொண்டிருக்கும்போது இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரசார் சட்டைகளை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது. காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மும்பை சென்ற ராகுல் காந்திக்கு பா.ஜனதாவினர் கருப்புக்கொடி காட்டினர்.
இந்த நிலையில் ஏ.ஐ. மாநாட்டில் காங்கிரசார் சட்டைகளை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டதற்கு இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-“நமக்குள் உள் பிளவுகள் இருக்கலாம். பா.ஜனதா பொய் சொல்கிறது என்பது நாட்டுக்கே தெரியும். ஆனால் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்ற ஏ.ஐ. மாநாட்டில் அவர்களது முன்னிலையில் சட்டையை கழற்றி காங்கிரசார் நடத்திய போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இது நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்தும். இது மாதிரியான போராட்டம் கண்டனத்துக்குரியது,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையே இளைஞர் காங்கிரசாரின் போராட்டத்தை காங்கிரஸ் தலைவர்கள் ஆதரித்துள்ளனர். கர்நாடக காங்கிரஸ் மந்திரி பிரியங்க் கார்கே கூறும்போது, “இந்த போராட்டம் சரியான மனநிலையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மாநாட்டில் சீன பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட சர்ச்சையில் பா.ஜனதா வெட்கப்பட வேண்டும்,” என்றார். மற்றொரு கர்நாடக மந்திரி ஈஸ்வர் காண்ட்ரே கூறும்போது, “போராட்டம் நடத்துவது இந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமை. மத்திய அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தினர். அதில் என்ன தவறு?” என்றார்.