தொழிலாளியை மரத்தில் தலைகீழாக தொங்க விட்டு கொடூர தாக்குதல்; வைரலான வீடியோ

சத்தீஷ்காரில் தொழிலாளியை மரத்தில் தலைகீழாக கட்டி தொங்க விட்டு சிறுவன் உள்பட 5 பேர் கடுமையாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
தொழிலாளியை மரத்தில் தலைகீழாக தொங்க விட்டு கொடூர தாக்குதல்; வைரலான வீடியோ
Published on

பிலாஸ்பூர்,

சத்தீஷ்காரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உச்பத்தி கிராமத்தில் வசித்து வருபவர் மணீஷ் காரே. இந்த மாவட்டத்தின் ரத்தன்பூர் பகுதியை சேர்ந்த மகாவீர் சூர்யவன்ஷி என்பவர் அந்த பகுதியில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 25ந்தேதி இரவில் மணீஷின் வீட்டுக்குள் மகாவீர் நுழைய முயன்றுள்ளார். இதனை மணீஷ் பார்த்துள்ளார். எனினும், மகாவீர் தப்பியோடி விட்டார். மகாவீரை மறுநாள் மணீஷ் போலீசில் பிடித்து ஒப்படைத்து உள்ளார். வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றுள்ளார் என போலீசில் மணீஷ் தெரிவித்து உள்ளார்.

எனினும், இந்த சம்பவத்தில் மகாவீருக்கு எதிராக மணீஷ் எப்.ஐ.ஆர். எதுவும் பதிவு செய்யவில்லை. இதனால், போலீசார் மகாவீரை எச்சரித்து, பின்னர் விடுவித்து விட்டனர்.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவில் மகாவீர் மீண்டும் மணீஷ் வீட்டுக்கு வந்து, வெளியே நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கி விட்டு தப்பியுள்ளார்.

இதனையடுத்து அடுத்த நாள் மணீஷ் தனது நண்பர்களான சிவராஜ் காரே மற்றும் ஜானு பார்கவ் ஆகியோருடன் மகாவீரை, செங்கல் சூளை அருகேயிருந்த மரம் ஒன்றில் தலைகீழாக கட்டி தொங்க விட்டுள்ளனர்.

இதன்பின் அவர்கள் மகாவீரை கம்பு குச்சிகளால் அடித்து, நொறுக்கியுள்ளனர். இதில், அலறிய மகாவீர் வலி பொறுக்காமல் கால்களை பிடித்து மரத்தின் கிளைக்கு ஏறி வர முயற்சிக்கிறார். இந்த சம்பவத்தில் 15 வயது பீம் கேசர்வானி என்ற சிறுவனும் இணைந்து கொண்டான்.

அந்த பகுதியில் உள்ள சிலர் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். எனினும், தாக்குதல் தொடர்ந்து உள்ளது. அவர்களில் ஒருவர் மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் அதனை பரவ விட்டுள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் மணீஷ் மற்றும் சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மகாவீரிடம் போலீசார் வாக்குமூலம் வாங்கியுள்ளனர்.

நடந்த சம்பவத்திற்கு பின்னர் மகாவீர் அந்த ஊரை விட்டு வெளியேறி சென்றுள்ளார். அவரின் இருப்பிடம் பற்றி அறியும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com