

ஜம்மு,
ராஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றனர். எல்லையில் சந்தேகத்திற்கு இடமான நகர்வை கண்டறிந்த எல்லைப் பாதுகாப்பு படை, பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து இருதரப்பு இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. எல்லைப் பாதுகாப்பு படை நடத்திய பதிலடி தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் இருந்து பெருமளவு ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
பயங்கரவாதிகள் சண்டையின் போது கையெறி குண்டுகளையும் வீசிஉள்ளனர். பாதுகாப்பு படை சண்டை நடைபெற்ற பகுதியில் இன்று காலையில் நடத்திய சோதனையின் போது கையெறி குண்டுகள், துப்பாக்கிகள் என பெருமளவு ஆயுதங்களை பறிமுதல் செய்தது. துப்பாக்கி தோட்டாக்கள் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஏ.கே. ரக துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டது. எல்லையில் உள்ள வேலியை அகற்றுவதற்கும் சாதனங்களை கையில் கொண்டுவந்து உள்ளனர்.
கண்ணி வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், கத்திகள் உள்பட பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் ஊடுருவ முயன்றது பெரும் நாசவேலையை நடத்த திட்டமிட்டு இருந்தனர் என்பதை காட்டுகிறது.
துப்பாக்கி சண்டை நடைபெற்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரவாதி இந்திய ராணுவ வீரர்கள் அணியும் உடையை அணிந்து இருந்தான். பயங்கரவாதிகள் இன்னும் பாகிஸ்தான் பகுதியில் பதுங்கியிருக்கலாம், அவர்கள் மீண்டும் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது என அப்பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த நவம்பர் 29-ம் தேதியில் இருந்து சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் இதுபோன்று நடந்த 26 பயங்கரவாத ஊடுருவல் முயற்சியானது முறியடிக்கப்பட்டது.