

அகர்தலா
திரிபுரா மாநிலத்தில் உள்ள இந்தியா-வங்காளதேச எல்லைப்பகுதி வழியாக கால்நடைகள் கடத்தப்படுவதை தடுக்கவும், சட்டவிரோத செயல்களை தடுக்கவும் எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
அவ்வகையில், இன்று அதிகாலை 2 மணியளவில் எல்லையை ஒட்டியுள்ள பெலார்தேபா முகாம் அருகே எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு வாகனம் எல்லைப் பாதுகாப்பு படையினர் மீது மோதியது. அது மாடு கடத்தல் கும்பல் வந்த வாகனமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த வாகனத்தில் வந்தவர்களை நோக்கி மற்றொரு வீரர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார். ஆனால், அந்த கும்பல் தப்பிச் சென்றுவிட்டது.
வாகனம் மோதியதில் எல்லை பாதுகாப்பு படையின் கமாண்டிங் அதிகாரி தீபக் கே.மண்டல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில், அவரை உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தையடுத்து, நிகழ்விடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.