

புதுடெல்லி,
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நடியாவின் மஹத்பூரில் எல்லைப்பாதுகாப்பு படையின் 15-வது பட்டாலியன் தலைமையகம் உள்ளது. தலைமையகத்தில் தினமும் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்களுக்கு ஜீரோ பரேடு நடக்கிறது. வருகையை பதிவு செய்யும் வகையில் அனைவரும் மொத்தமாக கூடும் இடத்தில் ஜீரோ பரேடு நடக்கிறது. கடந்த 21-ம் தேதி இதுபோன்ற பரேடு நடக்கும் போது கான்ஸ்டபிள் சஞ்சீவ் குமார், பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சி ஒன்றை மோடி நிகழ்ச்சி என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.
சஞ்சீவ் குமாரின் பேச்சு பிரதமரை அவமரியாதை செய்துள்ளதாக பட்டாலியனின் தலைமை அதிகாரி அனுப்லால் பஹத் கருதி உள்ளார்.
எல்லைப் பாதுகாப்பு படை சட்டம் 1968 பிரிவு 40-ன் கீழ் (ஒழுங்கு நடவடிக்கை) கான்ஸ்டபிள் சஞ்சீவ் குமார் மீது எல்லைப் பாதுகாப்பு படை நடவடிக்கையை எடுத்தது. பிரதமர் மோடியை மாண்புமிகு என குறிப்பிடவில்லை என அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், 7 நாட்கள் சம்பளத்தை ரத்துசெய்யவும் உத்தரவிடப்பட்டது. பிரதமர் மோடியை மாண்புமிகு, ஸ்ரீ என்று குறிப்பிடாத சஞ்சீவ் குமார் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மற்ற வீரர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு உள்ளார்.
எல்லைப் பாதுகாப்பு படை டிஜி கே.கே. சர்மா கான்ஸ்டபிள் சஞ்சீவ் குமாருக்கு எதிரான உத்தரவை திரும்ப பெற பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு உள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி வலுவான அதிருப்தியை தெரிவித்தார், எல்லைப் பாதுகாப்பு படை வீரருக்கு வழங்கப்பட்ட தண்டனையை உடனடியாக திரும்ப பெற எல்லைப் பாதுகாப்பு படை டிஜிக்கு உத்தரவிட்டார். உத்தரவை எல்லைப் பாதுகாப்பு படை ரத்து செய்தது. சரியான முறையில் ஆராயமல் நடவடிக்கையை முன்னெடுத்த அதிகாரிக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது, என இந்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.