வங்காளதேச எல்லையில் வேலி அமைக்க பாதுகாப்புப்படைக்கு நிலம் வழங்க மேற்கு வங்காள அரசு அனுமதி

மேற்கு வங்காளத்தில் நடந்த தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது.
வங்காளதேச எல்லையில் வேலி அமைக்க பாதுகாப்புப்படைக்கு நிலம் வழங்க மேற்கு வங்காள அரசு அனுமதி
Published on

கொல்கத்தா,

இந்தியாவில் அண்டை நாடு வங்காளதேசம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் வங்காளதேசத்துடன் எல்லையை பகிர்கின்றன. அந்த வகையில் மேற்கு வங்காள மாநிலம் வங்காளதேசத்துடன் 4 ஆயிரத்து 97 கிலோ மீட்டர் நீளத்திற்கு எல்லையை பகிர்கிறது. இதில், 3 ஆயிரத்து 240 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதுகாப்புப்படை வேலி அமைத்துள்ளது. எஞ்சிய சுமார் 850 கிலோ மீட்டர் நீளத்திற்கு இதுவரை எந்தவித வேலியும் அமைக்கப்படவில்லை. இதனால், வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக பலர் நுழையும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இதனிடையே, வங்காளதேச எல்லையில் எஞ்சிய பகுதியில் வேலி அமைக்க நிலம் வழங்கும்படி எல்லைப்பாதுகாப்புப்படை மம்தா பானர்ஜி தலைமையிலான கடந்த மேற்கு வங்காள அரசிடம் அனுமதி கேட்டது. ஆனால், மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு வங்காளதேச எல்லையில் வேலி அமைக்க எல்லைப்பாதுகாப்புப்படைக்கு நிலம் வழங்க மறுத்துவிட்டது.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் நடந்த தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. அம்மாநில முதல்-மந்திரியாக சுவந்து அதிகாரி பதவியேற்றுள்ளார். முதல்-மந்திரியாக பதவியேற்றப்பின் சுவேந்து அதிகாரி தலைமையில் இன்று மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வங்காளதேச எல்லையில் வேலி அமைக்க பாதுகாப்புப்படைக்கு நிலம் வழங்க மந்திரி சபை அனுமதி வழங்கியுள்ளது. வங்காளதேச எல்லையில் வேலி அமைக்க தேவையான நிலங்களை எல்லைப்பாதுகாப்புப்படை இன்று முதல் எடுத்துக்கொள்ளலாம் என்று மந்திரி சபை அனுமதி வழங்கியுள்ளது. எல்லையில் வேலி அமைக்க அடுத்த 45 நாட்களுக்குள் நிலம் முழுவதும் எல்லைப்பாதுகாப்புப்படையிடம் முழுமையாக ஒப்படைக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com