குடும்பத்துடன் ஆன்மிக பயணம்: உள்ளாடைகள் வாங்கி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பி.எஸ்.என்.எல். இயக்குநர்: விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ்

தனது உத்தரவால் பெரும் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து, பிரயாக்ராஜ் ஆன்மிக பயணத்தை விவேக் பன்சால் ரத்து செய்தார்.
குடும்பத்துடன் ஆன்மிக பயணம்: உள்ளாடைகள் வாங்கி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பி.எஸ்.என்.எல். இயக்குநர்: விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ்
Published on

புதுடெல்லி,

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-ன் இயக்குநராக விவேக் பன்சால் பணியாற்றி வருகிறார். இவர், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள கங்கை திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் நீராட திட்டமிட்டார்.

இதற்காக, 2 நாள் பயணமாக நேற்றும், இன்றும் அங்கு செல்ல அவர் திட்டமிட்டு இருந்தார். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக துறை ரீதியான சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

50 ஊழியர்கள் நியமனம்

பொதுவாக, ஒரு இடத்திற்கு உயரதிகாரி ஒருவர் செல்கிறார் என்றால், அங்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை துறை சார்ந்த அதிகாரிகள் செய்து கொடுப்பது வழக்கம். ஆனால், அதையும் தாண்டி இவர், கங்கையில் குளித்த பின் உடலை துடைக்க டவல், சோப்பு, சீப்பு, கண்ணாடி, உள்ளாடைகள் ஆகியவற்றை வாங்கி வைக்க உத்தரவிட்டு இருந்தார். அதுவும் உள்ளாடைகள், ஆண்களுக்கு 6 செட்டும், பெண்களுக்கு 2 செட்டும் வாங்கி, படித்துறையில் தயாராக வைக்க அறிவுறுத்தி இருந்தார்.

இந்த ஏற்பாடுகளை செய்வதற்காக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 50 ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இதுதவிர அவர் தங்கும் ஹோட்டல் அறையில் உலர் பழங்கள், பழங்கள், முகச்சவரம் செய்வதற்கான ஷேவிங் கிட்டுகள், டவல், டூத் பேஸ்ட், பிரஷ், சோப்பு, ஷாம்பு, சீப்பு, தலைக்கு தேய்க்க தேங்காய் எண்ணெய் என அனைத்தும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

சமூக வலைதளங்களில் சுற்றறிக்கை வைரல்

துறை ரீதியாக அனுப்பிவைக்கப்பட்ட இந்த சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதுடன் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. நஷ்டத்தில் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் இயக்குநருக்கு இத்தனை ஆடம்பரம் தேவையா? என்று விவாதங்களும் எழுந்தன.

தனது உத்தரவால் பெரும் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து, பிரயாக்ராஜ் ஆன்மிக பயணத்தை விவேக் பன்சால் ரத்து செய்தார். அதே நேரத்தில், இந்த விவகாரம் மத்திய அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. தற்போது விவேக் பன்சாலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

விளக்கம் அளிக்காவிட்டால் நடவடிக்கை

இதுகுறித்து மத்திய மந்தி ஜோதிராதித்ய சிந்தியா கூறும்போது, "விவேக் பன்சாலின் இந்த ஆடம்பர ஏற்பாடுகளை ஒருபோதும் ஏற்க முடியாது. முறையற்ற, விதி மீறிய நடத்தை குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் சரியான விளக்கத்தை அவர் அளிக்காவிட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com