பி.எஸ்.என்.எல். நிறுவனம் 17 ஆண்டுகளில் முதன்முறையாக லாபம் ஈட்டி சாதனை

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 17 ஆண்டுகளில் முதன்முறையாக, ரூ.262 கோடி என்ற அளவில் லாபம் ஈட்டி சாதனை படைத்து உள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் 17 ஆண்டுகளில் முதன்முறையாக லாபம் ஈட்டி சாதனை
Published on

புதுடெல்லி,

அரசு சார்பு நிறுவனங்களில் ஒன்றான பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2025-ம் நிதியாண்டிற்கான மூன்றாம் காலாண்டில் ரூ.262 கோடி அளவுக்கு லாபம் ஈட்டி உள்ளது. 2007-ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக இந்த காலாண்டானது லாபம் ஈட்டி தந்துள்ளது.

நெட்வொர்க் விரிவாக்கம், நிர்வாக செலவுகளை குறைத்தலுக்கான முயற்சிகள் மற்றும் அனைத்து வர்த்தக பிரிவுகளிலும் வளர்ச்சி ஆகியவை நிறுவனத்திற்கு இந்த வெற்றியை பெற்று தந்துள்ளது. 4ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்துவது, ஆப்டிக் பைபர் உட்கட்டமைப்பை மேம்படுத்தியது மற்றும் செலவினங்களை கட்டுப்படுத்தும் நிர்வாக நடவடிக்கைகள் இந்த வளர்ச்சியை அடைய உதவியுள்ளன.

இதனால், நிதியாண்டின் இறுதியில் (மார்ச் 31) நிறுவனத்திற்கான வருவாய் 20 சதவீதம் அதிகரிக்கும் என பி.எஸ்.என்.எல். தொலைதொடர்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநரான ராபர்ட் ரவி கூறியுள்ளார்.

அந்நிறுவனம், நாடு முழுவதும் 4ஜி சேவையை கொண்டு செல்லும் நோக்குடன் செயல்பட்டு வருவதுடன், அந்த பணி நிறைவடைந்ததும், குறிப்பிட்ட இடங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் திட்டமும் தயாராக உள்ளது. சேவையில் தர மேம்பாடு மற்றும் வாடிக்கையாளருக்கு இனிய அனுபவம் போன்ற டிஜிட்டல் உருமாற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

நாடு முழுவதும் 1 லட்சம் இடங்களில் 4ஜி நெட்வொர்க்கை செயல்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. இதற்கேற்ப, ரூ.6 ஆயிரம் கோடி கூடுதலாக நிதியுதவியாக வழங்குவதற்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது. இது முதலீட்டு செலவினங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய உதவும்.

2019-ம் ஆண்டில் இருந்து பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களுக்காக ரூ.3.22 லட்சம் கோடியை அரசு செலவிட்டு உள்ளது. இதனால், 2020-21 நிதியாண்டு முதல் இந்நிறுவனங்கள் செயல்பாட்டளவில் லாபம் ஈட்ட தொடங்கியுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com