

ராஜஸ்தானின் அனுமன்கார்க் பகுதியில் காதல் விவகாரத்தில் தலித் வாலிபர் ஒருவர் கடந்த 7-ந்தேதி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பி இருக்கிறது. இந்த நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக மாநில காங்கிரஸ் அரசு மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர்களை பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ராஜஸ்தானின் அனுமன்கார்கில் தலித் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு உள்ளார்.
இது மிகவும் சோகமானதும், கண்டனத்துக்குரியதும் ஆகும். ஆனால் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் மவுனம் சாதிப்பது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார். கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரை சத்தீஸ்கார் மற்றும் பஞ்சாப் மாநில முதல்-மந்திரிகள் சந்தித்து ரூ.50 லட்சம் இழப்பீடு கொடுப்பார்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ள மாயாவதி, இதற்கு பதில் தேவை எனவும், இல்லையென்றால் தலித்துகளின் பெயரில் முதலைக்கண்ணீர் வடிப்பதை நிறுத்துமாறும் கூறியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை ராகுல் காந்தி மற்றும் சத்தீஸ்கார், பஞ்சாப் மாநில முதல்-மந்திரிகள் உள்ளிட்ட காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், இழப்பீடும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.