பட்ஜெட் கூட்டத்தொடர் 2-ம் பகுதி: நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று கூடுகின்றன; எதிர்க்கட்சிகள் அமளியை கிளப்ப திட்டம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நடந்து முடிந்து, மார்ச் 10-ந்தேதி (இன்று) வரை ஒத்தி வைக்கப்பட்டது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந்தேதி தொடங்கியது. இதில், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இதனை தொடர்ந்து, பிப்ரவரி 1-ந்தேதி 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசினார்.
இதன்பின்னர், பிப்ரவரி 13-ந்தேதி வரை நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். நாடாளுமன்றத்தில், பல்வேறு மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நடந்து முடிந்த இரு அவைகளும், மார்ச் 10-ந்தேதி (இன்று) வரை ஒத்தி வைக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் பகுதி இன்று தொடங்கி நடைபெறும். இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 4-ந்தேதியுடன் நிறைவடையும். இந்த 2-ம் பகுதியில், திரிபுவன் ஷாகாரி பல்கலைக்கழக மசோதா 2025-ஐ மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தாக்கல் செய்ய உள்ளார்.
இதன்படி, கிராமப்புற மேலாண்மை ஆனந்த் மையம் இனி பல்கலைக்கழக அந்தஸ்துடன், திரிபுவன் ஷாகாரி பல்கலைக்கழகம் என அழைக்கப்படும். அதனுடன் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மையங்களில் ஒன்றாக அது அறிவிக்கப்படும். இதேபோன்று, கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் மற்றும் நிலைக்குழு அறிக்கைகளும் மக்களவையில் தாக்கல் செய்ய பட்டியலிடப்பட்டு உள்ளன.
எனினும், இந்தியாவுக்கு எதிரான டிரம்பின் வரிவிதிப்பு, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பான தங்களுடைய பரிந்துரைகள் நாடாளுமன்ற நிலைக்குழுவில் ஏற்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், வழக்கம்போல் பட்ஜெட் கூட்டத்தொடரில் கோஷங்களும், கூச்சல்களும் மற்றும் அமளிகளுக்கும் பஞ்சமிருக்காது என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






