பா.ஜனதாவினரை காப்பாற்றவே எருமைக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலனை - மம்தா பானர்ஜி

மாட்டிறைச்சி விற்பனை அரசாணையிலிருந்து எருமை மாட்டிற்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலனை செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பா.ஜனதாவினரை காப்பாற்றவே எருமைக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலனை - மம்தா பானர்ஜி
Published on

கொல்கத்தா,

கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சந்தையில் காளைகள், பசுமாடுகள், எருமை மாடுகள், கன்றுடன் கூடிய பசுமாடு, கன்று, ஒட்டகம் போன்றவற்றை இறைச்சிக்காக வாங்கவோ, விற்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாட்டிறைச்சி விற்பனை தொடர்பான அரசாணைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில்,அரசாணையில் உள்ள விலங்குகள் பட்டியலிலிருந்து எருமை மாட்டை மட்டும் நீக்குவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என தகவல்கள் வெளியாகியது. இந்தியாவில் உள்ள மாட்டிறைச்சியில் 90 சதவீதத்திற்கும் மேல் எருமை மாடுகளிடமிருந்து தான் வருகிறது.

மேலும் பல்வேறு சமூக மக்களின் சடங்குகளிலும் எருமை மாட்டை பலியிடும் வழக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் புதிய அரசாணை மூலம் எருமை மாடுகளை இறைச்சிக்காக பயன்படுத்துவதற்கு தடை ஏற்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் எருமை மாட்டை மட்டும் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு மத்திய அரசு பரிசீலிப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாட்டிறைச்சி விற்பனை விவகாரத்தில் அரசாணையை கடுமையாக விமர்சனம் செய்து வரும் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசுகையில், அரசாணையில் உள்ள விலங்குகள் பட்டியலிலிருந்து எருமை மாட்டை மட்டும் நீக்குவதற்கு மத்திய அரசு பரிசீலிப்பது பாரதீய ஜனதா ஆதரவாளர்களுக்கு உதவிசெய்யவே. எருமை இறைச்சி வணிகத்தில் ஈடுபட்டு உள்ள பா.ஜனதா ஆதரவாளர்களுக்கு உதவ மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. அவர்களை பாதுகாக்கவே இந்நகர்வு, என கூறிஉள்ளார். மக்களின் உணவு பழக்க வழக்கத்தையும் கட்டுப்படுத்த மத்திய அரசு கட்டுப்படுத்த முயற்சி செய்கிறது எனவும் சாடிஉள்ளார் மம்தா பானர்ஜி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com