

கோரிக்கைகள் ஏற்கப்படும்
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறுவதாக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
எனினும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறுதல், உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் எழுப்பி தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படும் எனவும், எனவே போராட்டத்தை கைவிடுமாறும் மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், விவசாயிகளை கேட்டுக்கொண்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கழிவுகள் எரிப்பது குற்றமல்ல
வேளாண் சட்டங்களை தொடர்ந்து, விவசாயிகளின் பிற கோரிக்கைகளான குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் பயிர் பன்முகப்படுத்துதல் போன்றவை குறித்தும் விவாதிக்கப்படும். பிரதமர் மோடி அறிவித்தபடி உயர்மட்டக்குழு அமைப்பதன் மூலம் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
வேளாண் கழிவுகளை எரிப்பதை குற்றமற்றதாக மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது. அதன்படி, பயிர் கழிவுகள் எரிப்பது குற்றமல்ல.
மாநிலங்களுக்கு அதிகாரம்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெறுவதை பொறுத்தவரை, அவை மாநில அரசுகளின் அதிகாரத்துக்கு உட்பட்டவை.
எனவே வழக்குகளின் தீவிரத்தன்மையை பொறுத்து மாநில அரசுகள் முடிவு செய்யும். மேலும் விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவதையும் மாநில அரசுகளே முடிவு செய்யும். அந்தந்த மாநில சட்டங்களின் அடிப்படையில் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்த நியாயமும் இல்லை
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என விவசாயிகள் முதலில் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி அவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவற்றை திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதற்கு பின்னரும் போராட்டத்தை தொடர்வதில் எந்த நியாயமும் இல்லை.
எனவே போராட்டத்தை முடித்துக்கொண்டு விவசாய அமைப்புகள் தங்கள் பெருந்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். போராட்டக்களங்களில் இருந்து தங்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும்.
இவ்வாறு நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.