

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஹம்பூர் மாவட்டத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிக்குப்பின் மணமகன் குடும்பத்தினர் பஸ்சில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். பஸ்சில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
ஹம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் மணமகனின் தந்தை யூனிஸ் குரேஷி, பஸ் டிரைவர் அசோக் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். காயமடைந்தவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.