உத்தர பிரதேசத்தில் பேருந்து தீப்பிடித்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு

புகைமூட்டம் காரணமாக சிலர் மயக்கமடைந்த நிலையில், பேருந்து முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
உத்தர பிரதேசத்தில் பேருந்து தீப்பிடித்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து மஹோபா பகுதியை நோக்கி நேற்று இரவு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 35 பயணிகள் இருந்தனர். இரவு நேரம் என்பதால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் தூங்கிவிட்டனர்.

இந்நிலையில் யமுனா விரைவுச்சாலை வழியாக சென்றுகொண்டிருந்தபோது, அந்த பேருந்தில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததால் தீ பரவியதை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் பேருந்தில் புகை மற்றும் தீ பரவியதை அறிந்து பயணிகள் அனைவரும் எழுந்து பேருந்து விட்டு வெளியேற முயன்றனர். சிலர் ஜன்னல் வழியாக குதித்து தப்ப முயன்றனர்.

இந்த குழப்பத்திற்கு நடுவே புகைமூட்டம் காரணமாக சிலர் மயக்கமடைந்த நிலையில், பேருந்து முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்த தீ விபத்தில் ஒரு பெண் உள்பட 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், பேருந்து மீது தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமானது.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பேருந்தில் இருந்த குளிர்சாதன அமைப்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com