

ஜான்சி,
ராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில் போட்டி தேர்வு பயிற்சி மையங்கள் அதிக அளவில் செயல்படுகின்றன. இங்குள்ள போட்டித்தேர்வு பயிற்சி மையங்களில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். குறிப்பாக உத்தர பிரதேசத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால், கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சொந்த ஊர் திரும்ப முடியாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
இவ்வாறு தவித்துவரும் தங்கள் மாநில மாணவர்களை அழைத்து வர 300 சிறப்பு பேருந்துகளை உத்தர பிரதேச அரசு நேற்று ஏற்பாடு செய்திருந்தது. ஆக்ராவில் இருந்து 200 பேருந்துகளும், ஜான்சியில் இருந்து 100 பேருந்துகளும் புறப்பட்டன. இதில், முதற்கட்டமாக கோடா நகரில் இருந்து ஜான்சிக்கு 100 பேருந்துகள் மாணவர்களுடன் புறப்பட்டன.
மாநிலம் திரும்பும் அனைத்து மாணவர்களும், முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள், அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று உத்தர பிரதேச மாநில அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது.