

புதுடெல்லி,
கொரோனாவால் நாட்டில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர்.
இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் பார் சில்ட்ரன் என்ற திட்டத்தின் கீழ் ஆதரவு அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தார்.
இந்த திட்டத்தின்கீழ் முக்கியமாக குழந்தைகள் 18 வயதை அடைந்தவுடன் மாதாந்திர உதவித்தொகையும், 23 வயதை அடைந்ததும் ரூ.10 லட்சம் நிதியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்ட அமலாக்கம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாடு துறை மந்திரி ஸ்மிரிதி இரானி பதில் அளித்து கூறியதாவது:-
கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் சார்பில் பி.எம்.கேர்ஸ் பார் சில்ட்ரன் திட்டத்தின் கீழ் உதவி பெற கடந்த 14-ந்தேதி வரை 8,872 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 4,300 விண்ணப்பங்களுக்கு சம்மந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
பெறப்பட்ட விண்ணப்பங்களில், 6 வயது வரையிலான குழந்தைகள் 212 பேர், 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் 1,670 பேர், 14 முதல் 18 வரையிலான 2001 பேர், 18 முதல் 23 வயது வரையிலான 418 பேர் என 4,300 பேருக்கு பி.எம். கேர்ஸ் பார் சில்ட்ரன் திட்டத்தின்கீழ் உதவி பெற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், பாலின அடிப்படையிலான வன்முறையில் இருந்து தப்பியவர்கள் உள்பட துயரப்படுகிற இந்தியப்பெண்களுக்கு உதவுவதற்கான ஏற்பாடுகளை உலகெங்கிலும் உள்ள இந்திய தூதரகங்கள் கொண்டுள்ளன என தெரிவித்தார்.