

புதுடெல்லி,
இந்தியாவில் பீகார், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநில சட்டசபைகளில் காலியாக உள்ள பாங்கிபூர், ததியா, மஞ்சல்பூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 30-ந் தேதி வாக்குப்பதிவும், ஆகஸ்டு 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியில், அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் காலியாக இருக்கிறது. இதேபோல், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால், மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளும் காலியாக உள்ளது.
இந்த 7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க.வை விட்டு மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தல் நடத்தவும் 6 மாதங்கள் அவகாசம் இருப்பதால், தமிழகத்தில் சற்று தாமதமாகவே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.
தமிழ்நாட்டில் 7 தொகுதிகள் காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்தும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாததால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.