கர்நாடகத்தில் 3 மேல்-சபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

கர்நாடகத்தில் 3 மேல்-சபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் ஜெகதீஷ் ஷெட்டருக்கு மேல்-சபை உறுப்பினர் பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகத்தில் 3 மேல்-சபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
Published on

பெங்களூரு:

வேட்புமனு தாக்கல்

75 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக மேல்-சபையில் உறுப்பினர்களாக இருந்த பாபுராவ் சின்சனசூர், லட்சுமண் சவதி மற்றும் ஆர்.சங்கர் ஆகியோர் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். பாபுராவ் சின்சனசூரின் பதவி காலம் வருகிற 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி வரையும், ஆர்.சங்கரின் பதவி காலம் வருகிற 2026-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி வரையும், லட்சுமண் சவதியின் பதவி காலம் வருகிற 2028-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி வரையும் உள்ளது.

அவர்கள் மூன்று பேருமே பா.ஜனதாவை சேர்ந்தவர்கள். அவர்களில் பாபுராவ் சின்சனசூர், லட்சுமண் சவதி ஆகியோர் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டனர். அதில் லட்சுமண் சவதி மட்டும் வெற்றி பெற்றார். பாபுராவ் சின்சனசூரும், சுயேச்சையாக போட்டியிட்ட ஆர்.சங்கரும் தோல்வி அடைந்தனர். அவர்கள் மூன்று பேரின் ராஜினாமாவால் மேல்-சபையில் 3 இடங்கள் காலியாக இருக்கின்றன. இதையடுத்து அந்த 3 இடங்களுக்கு வருகிற 30-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது. இந்த நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இதற்கான தேர்தல் அதிகாரியாக சட்டசபை செயலாளர் விசாலாட்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர்கள்

முதல் நாளில் தமிழ்நாட்டின் மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் மனு தாக்கல் செய்தார். அவரது மனு தள்ளுபடி ஆகும் என்று கூறப்படுகிறது. ஆளும் காங்கிரஸ் உள்பட அரசியல் கட்சிகள் இதுவரை மனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் இந்த தேர்தலில் மனுக்களை தாக்கல் செய்ய இன்று(செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். ஆளும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்களாக முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், சிறிய நீர்ப்பாசனத்துறை மந்திரி என்.எஸ்.போசராஜ், பாபுராவ் சின்சனசூர் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று திடீரென காங்கிரஸ், தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் பாபுராவ் சின்சனசூரின் பெயர் இடம்பெறவில்லை. அவர் கழற்றிவிடப்பட்டு அவருக்கு பதிலாக திப்பண்ண கமக்கனூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் இன்று ஜெகதீஷ் ஷெட்டர், என்.எஸ்.போசராஜ், திப்பண்ண கமக்கனூர் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட உள்ளனர். சட்டசபையில் காங்கிரசுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் மூன்று இடங்களும் ஆளுங்கட்சிக்கே கிடைக்கும். இன்று மதியம் 3 மணிக்கு மனு தாக்கல் செய்யும் பணி நிறைவடைந்த பிறகு மனுக்கள் பரிசீலனை நாளை (புதன்கிழமை) நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற 23-ந் தேதி கடைசி நாள் ஆகும். எதிர்க்கட்சிகளான பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் சார்பில் வேட்பாளாகளை நிறுத்தும் திட்டம் இல்லை என்று சொல்லப்படுகிறது.

ஜெகதீஷ் ஷெட்டர்

ஒருவேளை போட்டியில் மூன்று பேர் மட்டுமே இருந்தால், அவர்கள் போட்டியின்றி எம்.எல்.சி.க்களாக தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 23-ந் தேதி வெளியாகும். பா.ஜனதாவில் மூத்த தலைவராக இருந்த முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்காததால், கடும் அதிருப்தி அடைந்து காங்கிரசில் சோந்தார்.

காங்கிரஸ் சார்பில் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியை சந்தித்தார். இதையடுத்து ஜெகதீஷ் ஷெட்டருக்கு எம்.எல்.சி. பதவியை காங்கிரஸ் வழங்குகிறது. லிங்காயத் சமூகத்தை சேர்ந்த அவருக்கு பதவி வழங்கினால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வட கர்நாடகத்தில் அந்த சமூகத்தின் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என்று காங்கிரஸ் நம்புகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com