

கொச்சி
நடிகை பாவனாவிடம் மிரட்டி பணம் பறிக்கவே கூட்டாளிகளுடன் சேர்ந்து காரில் அவரை கடத்தினேன் என்று கைதான முக்கிய குற்றவாளி டிரைவர் சுனில்குமார் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரளாவில் நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ், மலையாள நடிகர்நடிகைகள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன் குற்றவாளிகளை பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். முதல்மந்திரி பினராயி விஜயன் அவசர நடவடிக்கை மூலம் போலீஸ் வேட்டையை முடுக்கி விட்டார்.
பாவனாவின் டிரைவர் மார்ட்டின் உடனடியாக கைது செய்யப்பட்டார். கோவையில் பதுங்கி இருந்த மேலும் 2 பேரையும், பாலக்காட்டில் பதுங்கிய மணிகண்டன் என்பவரையும் கைது செய்தனர். கடத்தலில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பாவனாவின் முன்னாள் டிரைவர் சுனில்குமார் என்ற பல்சர் சுனி தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்தது. கோர்ட்டில் சரணடையக்கூடும் என்று அங்கும் மாறுவேடத்தில் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் எர்ணாகுளம் கூடுதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைவதற்காக சுனில்குமாரும், அவரது கூட்டாளி விஜேசும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களை வேனில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். பெண் போலீஸ் அதிகாரி சந்தியா இருவரிடமும் விசாரணை நடத்தினார்.
பாவனாவை கடத்தியது ஏன்?, இந்த கடத்தலில் நடிகர்களுக்கு தொடர்பு உள்ளதா?, பாலியல் தொல்லை கொடுத்தது யார்? என்றெல்லாம் அவர்களிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டனர். இதற்கு பதில் அளித்து சுனில்குமார் அளித்த வாக்குமூலம் வருமாறு:
எனக்கு மலையாள பட உலகில் நடிகர்நடிகைகள், டைரக்டர்கள் பலரை தெரியும். நீண்ட காலமாக அவர்களுக்கு கார் ஓட்டி வருகிறேன். பாவனாவுக்கும் கார் ஓட்டி இருக்கிறேன். தற்போது அவரிடம் நான் வேலையில் இல்லை. நடிகர்நடிகைகள் பலர் டிரைவர்கள் தேவை என்றால் என்னிடம்தான் தொடர்பு கொண்டு பேசுவார்கள். நான் அவர்களுக்கு டிரைவர்களை ஏற்பாடு செய்து கொடுப்பேன்.
ஏற்கனவே திரையுலகில் உள்ள சிலரிடம் மிரட்டி பணம் வாங்கி இருக்கிறேன். அதுபோல் பாவனாவிடமும் மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டேன். இதற்காக கூட்டாளிகள் சிலரை சேர்த்துக்கொண்டு, பாவனாவிடம் பல லட்சங்களை மிரட்டி வாங்கி அந்த தொகையில் ஒரு பகுதியை உங்களுக்கு பிரித்து தருகிறேன் என்று ஆசை காட்டினேன்.
அதன்படி திருச்சூரில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு கொச்சிக்கு காரில் திரும்பிக்கொண்டு இருந்த பாவனாவை வழிமறித்து கடத்தினோம். வீடியோ கேமராவையும் எடுத்துச் சென்று இருந்தோம். பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவற்றை வீடியோவில் படமாக்கினோம். பின்னர் பாவனாவிடம் பணம் கேட்டு மிரட்டினோம். பணம் கொடுக்காவிட்டால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று பயமுறுத்தினோம்.
2 மணி நேரத்துக்கு பிறகு காரை விட்டு இறங்கி சென்றுவிட்டோம். பாவனா பயந்துபோய் மறுநாள் பணத்துடன் என்னை தொடர்பு கொள்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் போலீசுக்கு சென்று விட்டார். போலீசில் புகார் செய்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதனால் தலைமறைவாகி விட்டோம். நடிகர் தூண்டுதல் பேரில் பாவனாவை கடத்தவில்லை. மிரட்டி பணம் பறிப்பதற்காகவே அவரை கடத்தினோம்.
இவ்வாறு சுனில்குமார் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. கடத்தல் சதியில் நடிகர் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என்று அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.