குடியுரிமை திருத்த சட்டத்தை ‘காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்தமாட்டோம்’ - பொதுச்செயலாளர் அறிவிப்பு

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை ‘காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்தமாட்டோம்’ - பொதுச்செயலாளர் அறிவிப்பு
Published on

கொச்சி,

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற அண்டை நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறி இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்து உள்ளது.

இந்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. டெல்லி, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரளாவில் நேற்று காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடந்தன. இதில் ஆலப்புழா மாவட்டத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமையில் கண்டன பேரணி நடந்தது.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் மாணவர்கள் மீதான போலீசாரின் தாக்குதல் போன்றவற்றை கண்டித்து நடந்த இந்த பேரணியில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அப்போது வேணுகோபால், செய்தியாளர்களிடம் கூறுகையில், இது (குடியுரிமை திருத்த சட்டம்), அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு சட்டம். அரசியல் சாசனத்துக்கு எதிரான ஒரு சட்டத்தை அமல்படுத்துமாறு மாநிலங்களை கட்டாயப்படுத்த முடியாது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், இந்த சட்டத்தை அமல்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com