

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்கப்படுகின்றன. பணவீக்கத் தரவுகளின் அடிப்படையில் இவை பொதுவாக ஆண்டுக்கு இருமுறை திருத்தப்படுவது வழக்கம். வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அமலுக்கு வரும் அகவிலைப்படி உயர்வை மார்ச் மற்றும் அக்டோபர் மாதவாக்கில் மத்திய அரசு அறிவிக்கும். இருப்பினும், இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் எப்போது அறிவிப்பு வரும் என்று காத்திருந்த நிலையில், அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படி உயர்வை 63 சதவீதமாக்க கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான கூடுதல் அகவிலைப்படிக்காக ரூ.10,016 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொள்கலன் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ‘விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் கேலோ இந்தியா திட்டத்துக்கு ரூ.1,856 கோடியும், பிரதமரின் விக்சித் கிராம ஸ்வராஜ் யோஜனா திட்டத்துக்கு ரூ.7,395 கோடியும் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.