

புதுடெல்லி,
வருகிற 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதை கருத்தில் கொண்டு, தான் எதிர்பார்த்த அளவு திறம்பட செயல்படாத மந்திரிகளை நீக்கிவிட்டு புதிய மந்திரிகளை நியமிப்பது குறித்தும், நிதி மந்திரி அருண்ஜெட்லி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி ஹர்ஷ வர்தன், ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி ஆகியோரிடம் இருக்கும் கூடுதல் இலாகாக்களை பகிர்ந்து அளிப்பது பற்றியும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வந்தார். இது தொடர்பாக பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷாவுடன் நேற்று முன்தினம் அவர் விரிவாக விவாதித்தார்.
இதைத்தொடர்ந்து, பிரதமர் மந்திரிசபையை மாற்றி அமைப்பதற்கு வசதியாக ராஜாங்க மந்திரிகளான ராஜீவ் பிரதாப் ரூடி (திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர்தனி பொறுப்பு), சஞ்சீவ் குமார் பல்யான் (நீர்வளத்துறை), பக்கன் சிங் குலாஸ்டே (சுகாதாரம், குடும்பநலம்), மகேந்திரநாத் பாண்டே (மனிதவள மேம்பாடு) ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து உள்ளனர்.மேலும் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு, நீர்வளத்துறை மந்திரி உமா பாரதி, உள்ளிட்டோர் ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மத்திய மந்திரிசபையை மாற்றி அமைக்கிறார்.பிரிக்ஸ் நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் நாளை பிற்பகல் சீனா புறப்பட்டு செல்கிறார். அதற்கு முன்னதாக நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. அமைச்சரவையில் புதியதாக இடம் பெறுபவர்கள் யார்? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், புதிதாக அமைச்சரவையில் இடம் பெறுபவர்களில் 12 க்கும் மேற்பட்டோர் புதிய முகங்களாக இருக்க கூடும் என்று கூறப்படுகிறது. பாரதீய ஜனதா பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவ், துணைத் தலைவர் வினய் சகஸ்ரபுத்தா, பிரகலாத் பட்டேல், சுரேஷ் அங்காடி, சத்யபால் சிங், பிரகலாத் ஜோஷி ஆகியோர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்கக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.
பீகார் முதல்மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து இருப்பதால், அந்த கட்சிக்கும் மத்திய மந்திரிசபையில் இடம் அளிக்கப்படுகிறது. ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த ஆர்.சி.பி.சிங், சந்தோஷ்குமார் ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.