கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை தேடி அம்மாநில போலீஸ் சென்னை வரவுள்ளதாக தகவல்

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை தேடி அம்மாநில போலீஸ் சென்னை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை தேடி அம்மாநில போலீஸ் சென்னை வரவுள்ளதாக தகவல்
Published on

சென்னை,

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்த கர்ணன் கடந்த ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அவர் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பதவி வகித்தபோதே சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக குற்றம் சாட்டினார். நீதித்துறையில் ஊழல் நடப்பதாக பிரதமர் அலுவலகத்துக்கும் கடிதம் எழுதினார். கொல்கத்தாவுக்கு மாறுதல் ஆன பிறகும் அவருடைய அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்தன. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு கர்ணன் மீது தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

அதன் விசாரணைக்கு அவர் ஆஜராகாததால், அவர் நீதிபதி பணியை செய்யக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8ந் தேதி உத்தரவிட்டது. மேலும், கடந்த 4ந் தேதி அவருக்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. ஆனால், நீதிபதி கர்ணன் அதற்கு மறுத்து விட்டார்.

இந்நிலையில், நீதிபதி கர்ணன் நேற்று ஓர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தனக்கு எதிரான அவமதிப்பு வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோருக்கும், தன்னை நீதிபதி பணியாற்ற தடை விதித்த நீதிபதி பானுமதிக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார். தன் வீட்டில் அமைக்கப்பட்ட தற்காலிக கோர்ட்டில் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கத்தக்க குற்றங்களை அவர்கள் செய்துள்ளதால், இந்த தண்டனை பிறப்பிக்கப்படுவதாக அவர் கூறினார். மேலும், ஒரு வாரத்துக்குள் தலா ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அபராதம் செலுத்தாவிட்டால், கூடுதலாக 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார்.

நீதிபதி கர்ணனின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று நீதிமன்ற அவமதிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது. கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. நீதிபதி என்பதால் சிறைதண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

உடனடியாக கர்ணனை கைது செய்ய வேண்டும் என மாநில போலீசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு சுப்ரீம் கோர்ட்டு சிறை தண்டனை விதிக்கப்படுவது இதுதான் முதல் முறையாகும்.

இந்நிலையில் கொல்கத்தாவிலுள்ள வீட்டில் கர்ணன் இல்லாததால் அவர் சென்னை வர திட்டமிட்டுள்ளதாகவும், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை தேடி அம்மாநில போலீஸ் சென்னை வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com